அந்நிய செலாவணி விகித கணக்கீட்டில் ஏற்பட்ட பிழை காரணமாக மக்கள் வங்கி 656 மில்லியன் ரூபாவை இழக்க நேரிட்டதாகவும், இது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் வங்கி உத்தியோகபூர்வ அறிவிப்பு மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.
2023 மே மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் அதன் அந்நிய செலாவணி பரிமாற்ற அமைப்பில் இயங்கிய ஒரு குறிப்பிட்ட நாணய அலகின் பரிமாற்ற விகித மாற்றப் பிழை காரணமாக, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு உரிய தொகையை விட அதிக பணம் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது. இந்த தொழில்நுட்ப சிக்கல் கண்டறியப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட துறைகள் அதை முழுமையாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த நிலைமை வெளிப்பட்டவுடன், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒரு உள் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் வங்கியின் செயல்பாட்டு அமைப்புகளின் செயல்முறையை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை அதிகாரிகளின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இது தொடர்பாக மேலும் விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பிழை காரணமாக வங்கிக்கு ஏற்பட்ட மொத்த நிதிப் பாதிப்பு சுமார் 656 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தக் குறிப்பிட்ட காலப்பகுதிக்கான கணக்கு அறிக்கைகளில் அந்தத் தொகை ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளதால், தற்போதைய கணக்கீடுகளின்படி வங்கிக்கு எதிர்காலத்தில் எந்தவொரு மேலதிக நிதிப் பாதிப்பும் ஏற்படாது என வங்கி எதிர்பார்க்கிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட மேலதிக பணத்தை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தச் செயல்முறை வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 3.8 ட்ரில்லியன் ரூபா பெறுமதியான பாரிய சொத்துக்களைக் கொண்ட மிகவும் வலுவான நிதி நிறுவனமான மக்கள் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை, இலாபம் அல்லது வாடிக்கையாளர் வைப்புகளின் பாதுகாப்புக்கு இந்தச் சம்பவம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் தினசரி பணிகள், டிஜிட்டல் வங்கி வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் அனைத்தும் எந்தவித இடையூறும் இன்றி வழக்கம் போல் செயல்படும் என அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
