இலங்கை மத்திய வங்கியினால் (CBSL) ஒழுங்குபடுத்தப்படும் நிதிச் சேவை நிறுவனங்களுக்கு எதிராக நிதிப் பாவனையாளர்கள் தமது முறைப்பாடுகளையும் குறைகளையும் சமர்ப்பிப்பதற்காக புதிய இணையவழி முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமை (CMS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்புக்குள் முறைப்பாடுகளைக் கையாளும் செயன்முறையின் பொறுப்புக்கூறல், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதே இந்த புதிய முறைமையை அறிமுகப்படுத்தியதன் பிரதான நோக்கம் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.
இந்த முறைமையின் மூலம் நிதிப் பாவனையாளர்கள் தமது முறைப்பாடுகளை மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் தரப்படுத்தப்பட்ட வடிவத்தில் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், அச்சிடப்பட்ட ஆவணங்களைச் சார்ந்து இருப்பதை குறைப்பதன் மூலம் முறைப்பாடுகளைக் கையாள்வதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கவும் இது வாய்ப்பளிக்கிறது.
வாரத்தின் ஏழு நாட்களும், நாளின் இருபத்திநான்கு மணிநேரமும் இயங்கும் இந்தத் தளத்தின் மூலம் பாவனையாளர்கள் தங்களுக்கு வசதியான எந்த நேரத்திலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம். அத்துடன், தமது முறைப்பாடுகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் பயனர்களுக்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், பாவனையாளர்கள் தமது முறைப்பாடுகள் அல்லது குறைகளை முதலில் சம்பந்தப்பட்ட நிதிச் சேவை நிறுவனத்திடம் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட பிரச்சினையைத் தீர்க்கத் தவறினால் அல்லது அவர்கள் வழங்கும் பதிலில் திருப்தி அடைய முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த இணையவழி முறைமை மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என வங்கி மேலும் அறிவித்துள்ளது.
இந்தச் செயன்முறையை மேலும் வினைத்திறனாக்குவதற்காக, சமர்ப்பிக்கப்படும் அனைத்து தகவல்களும் தெளிவான, சரியான மற்றும் முழுமையானதாக இருக்க வேண்டும் என்றும், அதனுடன் தொடர்புடைய அனைத்து துணை ஆவணங்களும் முறைமைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய வங்கி பாவனையாளர்களுக்கு அறிவுறுத்துகிறது.
இந்த புதிய முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமையை https://reachus.cbsl.lk/ என்ற இணைப்பின் மூலம் அணுகலாம் என்பதுடன், முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கான விரிவான வழிகாட்டல்களும் அந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.