எப்பாவல நகரில் அமைந்துள்ள ஒரு பிரதான அரச பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவர்களை இலக்கு வைத்து, அதே பாடசாலையின் மற்றுமொரு மாணவன் இன்று காலை மேற்கொண்ட கூரிய ஆயுதத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த எதிர்பாராத தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் உடனடியாக எப்பாவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்த பாடசாலையின் 12ஆம் தர உயர்தர தொழில்நுட்பப் பிரிவில் கல்வி கற்கும் ஐந்து மாணவர்களாவர். பொலிஸ் விசாரணைகளின்படி, இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர் அதே பாடசாலையின் 12ஆம் தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரான மாணவருக்கும் காயமடைந்த ஒரு மாணவருக்கும் இடையில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தகராறு இந்த வன்முறைச் செயலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
முன்னர் இருந்த மனக்கசப்பின் காரணமாக பழிவாங்கும் நோக்குடன், இன்று காலை குறித்த மாணவன் கூரிய ஆயுதம் ஒன்றையும் எடுத்துக்கொண்டு பாடசாலை வளாகத்திற்கு வந்துள்ளான். அங்கு அவன் ஒரு மாணவனைத் தாக்க முயன்றுள்ளான். அந்த சந்தர்ப்பத்தில், குறித்த தாக்குதலைத் தடுக்கவும் தனது நண்பனைக் காப்பாற்றவும் தலையிட்ட ஏனைய நான்கு மாணவர்களுக்கும் சந்தேகநபரான மாணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளான் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் உடனடியாக செயற்பட்ட எப்பாவல பொலிஸார், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட சிறிய கத்தியுடன் சந்தேகநபரான மாணவனைக் கைது செய்துள்ளனர். அவனுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. காயமடைந்த ஐந்து மாணவர்களினதும் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், அவர்கள் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்பாவல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.