அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை சுமத்திய எழுத்தாளர் ஈ. ஜீன் கரோல் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் டிரம்ப் மீதான சிவில் வழக்கு விசாரணையின் போது, அவர் பொய்யான சாட்சியம் அளித்தாரா என்பது குறித்து அரசாங்க வழக்கறிஞர்களின் கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாக, தனது சட்ட நடவடிக்கைகளுக்கு வெளிப்புற நிதி உதவி பெறவில்லை என்று அவர் அளித்த வாக்குமூலம் இந்த விசாரணைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.எவ்வாறாயினும், அந்த வாக்குமூலம் அளித்த சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, விசாரணை தொடங்குவதற்கு முன், லிங்க்ட்இன் (LinkedIn) இணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் நிதியுதவி அளித்த ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு, கரோலின் சட்டக் கட்டணங்கள் மற்றும் செலவுகளில் ஒரு பகுதியை செலுத்தியுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிபதிக்கும் டிரம்ப்பின் வழக்கறிஞர்களுக்கும் தெரிவித்தனர். இது அவரது நம்பகத்தன்மையை சேதப்படுத்தியுள்ளது என்று டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் வாதிட்டாலும், கரோலின் வழக்கறிஞர்கள், அவர் சம்பந்தப்பட்ட அமைப்பில் உள்ள எவரையும் சந்திக்கவோ அல்லது பேசவோ இல்லை என்று குறிப்பிட்டனர். இது தொடர்பாக கரோலை இரண்டாவது முறையாக கேள்வி கேட்க டிரம்ப்பின் வழக்கறிஞர் அலினா ஹப்பாவுக்கு நீதிபதி ஏற்கனவே அனுமதி அளித்திருந்தார்.
2024 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, கரோல் தனது சாட்சியத்தில் பொய் சொன்னார் என்ற குற்றச்சாட்டை நிராகரித்தது. ஈ. ஜீன் கரோல் தனது 2019 ஆம் ஆண்டு புத்தகத்தின் மூலம், நியூயார்க் கடையில் உள்ள ஆடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னை கட்டாயப்படுத்தியதாக முதலில் குற்றம் சாட்டினார். டிரம்ப் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், அவர் தாக்கல் செய்த சிவில் வழக்கில், டிரம்ப் குற்றவாளி என்று ஜூரி தீர்ப்பளித்து, 5 மில்லியன் டாலர் இழப்பீட்டையும், பின்னர் மற்றொரு ஜூரி 83 மில்லியன் டாலர் இழப்பீட்டையும் செலுத்த உத்தரவிட்டது. தற்போது டிரம்ப் இந்த இரண்டு தீர்ப்புகளுக்கும் எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த புதிய குற்றவியல் விசாரணை, டிரம்ப்பின் நீதித்துறை அரசியல் எதிரிகளுக்கு எதிராகத் தொடங்கிய தொடர்ச்சியான விசாரணைகளில் சமீபத்திய நிகழ்வாகக் கருதப்படுகிறது. முன்னதாக, முன்னாள் FBI தலைவர் ஜேம்ஸ் கோமி, நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிஷியா ஜேம்ஸ், அத்துடன் ஜனநாயகக் காங்கிரஸ் உறுப்பினர்களான ஆடம் ஷிஃப் மற்றும் இல்ஹான் ஓமர் ஆகியோருக்கு எதிராகவும் இதேபோன்ற பெடரல் விசாரணைகள் தொடங்கப்பட்டன. இதற்கிடையில், இடைக்கால அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச், கரோலின் சிவில் வழக்கில் டிரம்ப் சார்பாக முன்பு ஆஜரானதால், இந்த நீதித்துறை விசாரணையில் இருந்து அவர் விலகியுள்ளார் என்று CNN மற்றும் New York Times செய்தி சேவைகள் தெரிவித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவிக்க நீதித்துறை மற்றும் கரோலின் சட்டப் பிரதிநிதிகள் பதிலளிக்கவில்லை.