தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் சில வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்த சம்பவம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை வேண்டுமென்றே மீறிய குற்றத்திற்காக ஆறு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்ட அவருக்கு இந்த கடுமையான தண்டனையை விதிக்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று (14) தீர்ப்பளித்தது.சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, பிரதிவாதிக்கு முப்பது இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுடன், அந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருட மேலதிக சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சுரசேன தலைமையில், அவல கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தான் குற்றச்சாட்டுகளிலிருந்து நிரபராதி என்று பிரதிவாதி முதலில் தெரிவித்திருந்தாலும், பின்னர் அந்த அறிக்கையை வாபஸ் பெற்று, தான் குற்றவாளி என்பதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரருக்கு நீதிமன்றத்தை அவமதிக்கும் எந்த நோக்கமும் இருக்கவில்லை என்றும், தற்போதைய பொருளாதார சிரமங்கள் காரணமாக முன்னர் விதிக்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகையை செலுத்த முடியவில்லை என்றும் வாதிட்டனர்.
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையின் முடிவில், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 30 இலட்சம் ரூபாய் நஷ்டஈட்டை செலுத்துமாறு நீதிமன்றம் பிரதிவாதிக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் நஷ்டஈட்டுத் தொகையை செலுத்தி முடிக்க வேண்டும் என்ற போதிலும், தன்னால் அந்த தொகையை செலுத்த முடியாது என பிரதிவாதியான பணிப்பாளர் பின்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
தீர்ப்பை அறிவித்த பிரதம நீதியரசர், பிரதிவாதி உச்ச நீதிமன்ற உத்தரவை மிகவும் அலட்சியமாக கையாண்டார் என்று சுட்டிக்காட்டினார். இத்தகைய செயல்களுக்கு மென்மையான கொள்கை பின்பற்றப்பட்டால், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை சிதைந்துவிடும் என்பதால், தண்டனை விதிக்கும்போது பிரதிவாதியின் தனிப்பட்ட விடயங்களை விட நீதிமன்றத்தின் கௌரவம் மற்றும் பொதுப் பொறுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் குழாம் வலியுறுத்தியது.