மீகொட, ஹைலெவல் வீதியில் வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு நடத்தப்பட்ட தானசாலைக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நெருங்கிய உறவினர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீகொட பெத்தேகெதர முல்ல சந்திக்கு அருகில் இயங்கிய இந்த ரொட்டி தானசாலையின் வரிசையில் காத்திருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மேலும் ஏழு பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் பிலியந்தலை, வேவல, பள்ளி வீதி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அதன்படி, 56 வயதுடைய பி. பி. இந்திராணி என்ற தாய், அவரது மகள் 35 வயதுடைய நவீஷா நிலக்ஷி, இராணுவத்தில் கடமையாற்றிய 38 வயதுடைய மருமகன் லசிக பிரியங்கர நானாயக்கார மற்றும் பிலியந்தலை சமரகோன் வித்தியாலயத்தில் 10ஆம் வகுப்பில் கல்வி கற்ற இந்திராணியின் தம்பியின் மகள் 15 வயதுடைய மலீஷா சத்சரனி ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த மகள் மற்றும் மருமகன் அவிசாவளை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் கடந்த சனிக்கிழமை பிலியந்தலையில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் வெசாக் காட்சிகளைப் பார்த்துவிட்டு, அவர்களை மீண்டும் அவிசாவளையில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக திருமதி இந்திராணியும் அவரது கணவரும் முச்சக்கர வண்டியில் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். அந்தப் பயணத்தின் போது மீகொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியை நிறுத்தி, அதில் பயணித்தவர்கள் வீதியோரத்தில் இருந்த ரொட்டி தானசாலைக்குச் சென்றுள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியாக செயற்பட்ட திருமதி இந்திராணியின் கணவரும், மகளின் மூத்த குழந்தையும் வாகனத்திற்குள்ளேயே தங்கியிருந்ததால், அவர்கள் எவ்வித ஆபத்தும் இன்றி தப்பித்துள்ளனர். இருப்பினும், திருமதி நவீஷா தனது 18 மாத குழந்தையுடனும், கணவர், தாய் மற்றும் உறவுமுறை சகோதரியுடனும் தானசாலை வரிசையில் காத்திருந்தபோது இந்த கோர விபத்தை எதிர்கொண்டுள்ளார்.
அவிசாவளை திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கிச் சென்ற கார், வீதியின் இடதுபுறத்தில் தானசாலை வரிசையில் நின்ற சுமார் 13 பேரை மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கார் குறித்து ஹோமாகம கொடகம சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு அறிவிக்கப்பட்டதால், கார் மற்றும் அதன் சாரதியை கொடகம சந்தியில் வைத்து கைது செய்ய முடிந்தது. சந்தேகநபரான சாரதிக்கு சுவாசப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், விபத்து நடந்த நேரத்தில் அவர் கடுமையாக மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதி ர, இந்த விபத்து வேண்டுமென்றே செய்யப்பட்டதாகக் கருதுவதாகக் கூறினார். அதன்படி, சாரதிக்கு எதிராக வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாதாரண வீதி விபத்து என்பதற்குப் பதிலாக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் வலியுறுத்தினார்.