இருபத்திரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பாலியல் துஷ்பிரயோக வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இறுதியாக நீதி வழங்கப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு தீர்க்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டபோது பாதிக்கப்பட்ட குழந்தை 11 வயதுடையதாக இருந்ததுடன், குற்றம் 2001 அக்டோபர் முதல் 2002 ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பிரதிவாதி தான் விவசாயம் செய்த நிலத்திற்கு இந்த குழந்தையை ஏமாற்றி அழைத்துச் சென்று இந்த பாலியல் துஷ்பிரயோகத்தை செய்துள்ளதாக முறைப்பாடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால், முந்தைய சந்தர்ப்பங்களில் மற்றவர்களால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் துஷ்பிரயோக சம்பவங்களை வெளிப்படுத்துவதாகக் கூறி பிரதிவாதி குழந்தையை அச்சுறுத்தியிருந்ததாகவும் நீதிமன்ற அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த குற்றத்துடன் தொடர்புடையதாக, உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிரதிவாதிக்கு ஐந்து வருடங்கள் மற்றும் பத்து வருடங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்திருந்ததுடன், அந்த இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அத்துடன், முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும், பாதிக்கப்பட்டவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும் பிரதிவாதிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
தனக்கு எதிராக விதிக்கப்பட்ட இந்த சிறைத்தண்டனைகள் மற்றும் அபராதங்களை சவால் செய்து பிரதிவாதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அங்கு அவர் ஐந்து விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வாதிட்டிருந்தார், முறைப்பாட்டின் சாட்சியங்களில் முரண்பாடுகள் இருந்தமை மற்றும் குழந்தையின் சட்டப்பூர்வ பாதுகாவலரின் அனுமதியின்றி அவர் அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை நிரூபிக்க முறைப்பாடு தவறியமை ஆகியவை அவற்றில் அடங்கும். இருப்பினும், குழந்தையின் தந்தை அளித்த சாட்சியத்தின் மூலம் குழந்தை அவரது விருப்பமின்றி அழைத்துச் செல்லப்பட்டது தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டதால், பிரதிவாதி முன்வைத்த அந்த வாதங்கள் ஆதாரமற்றவை என்று நீதிபதி குமாரரத்னம் தீர்மானித்தார்.
சம்பவம் நடந்த திகதிகள் மற்றும் காலப்பகுதிகள் தொடர்பான சிறிய வேறுபாடுகள் வழக்கில் நியாயமான சந்தேகத்தை எழுப்புகின்றன என்ற பிரதிவாதியின் கூற்றையும் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த குற்றம் நடந்து இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் பாதிக்கப்பட்டவரும் அவரது தந்தையும் சாட்சியமளித்திருப்பதால், இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு சாட்சியங்களில் சிறிய முரண்பாடுகள் ஏற்படுவது இயற்கையானது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. எனவே, அது முறைப்பாட்டின் அடிப்படை வழக்குக்கோ அல்லது பாதிக்கப்பட்டவரின் நம்பகத்தன்மைக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலும் கூறியது.