
தனது நண்பரின் 13 வயது சிறுமி மகளுடன் காதல் உறவை ஏற்படுத்தி, அவளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 35 வயது நபர் ஒருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர், தொழிலாளியாக பணிபுரியும் சிறுமியின் தந்தையின் நெருங்கிய நண்பராவார்.
பொலிஸ் விசாரணைகளில், சந்தேகநபர் இந்த மாணவியை ஏமாற்றி மூன்று சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது. சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் அங்கு சென்றும், தோடுவாவ பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஒரு விடுதிக்கு அவளை அழைத்துச் சென்றும் இந்த குற்றத்தைச் செய்துள்ளமை மேலும் வெளிப்பட்டுள்ளது.
பாடசாலையில் 7 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இந்த சிறுமி அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார், பெற்றோர் பாதுகாவலின்றி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரை நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியை மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாரவில தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சரத் சமரவிக்ரம அவர்களின் பணிப்புரையின் பேரில், அந்த தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் சிறிமான்ன அம்மையார் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.