
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அங்கு சம்பவம் தொடர்பான மூன்று சாட்சியாளர்களால் பல முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டன.
இங்கு சாட்சியமளித்த யசாரா அபேநாயக்க அம்மையார் தெரிவித்ததாவது, இந்த வழக்கிற்கு அடிப்படையாக அமைந்த தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள வீட்டிற்கு தான் சென்றிருந்ததாகக் கூறினார். தானும் யோஷித ராஜபக்ஷவும் திருமணம் செய்து கொண்டு அந்த வீட்டில் குடியேற திட்டமிட்டிருந்ததாகவும், அந்த வீடு யோஷித ராஜபக்ஷவால் கட்டப்பட்டதென்பதை தான் அறிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். வீடு கட்டப்பட்ட காலத்தில் யோஷித ராஜபக்ஷ கடற்படையில் சேவையாற்றிக்கொண்டிருந்ததாகவும், 'சிஎஸ்என்' (CSN) அலைவரிசையின் நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்ததாகவும் கூறிய அவர், பிரதிவாதி யோஷித ராஜபக்ஷவுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் முன்வைத்த குறுக்குக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, சம்பந்தப்பட்ட வீடு பல அறைகளைக் கொண்ட மிக பெரிய மாளிகை என்றும் தெரிவித்தார்.
வழக்கின் மற்றொரு சாட்சியாளரும் காணி உரிமையாளருமான லூஷன் ரத்நாயக்க நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, ரத்மலானை கெகட்டிய வீதியில் அமைந்துள்ள சுமார் 31 பேர்ச்சஸ் காணியை விற்பனை செய்வதற்காக தனது நண்பரான வசந்த குமார ஜயசூரியவிடம் ஒப்படைத்ததாகக் கூறினார். அதன்பின் வசந்த குமார ஒரு வாங்குபவரை அழைத்து வந்ததாகவும், ஆனால் அவர் யார் என்று தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், பின்னர் 34.5 மில்லியன் ரூபாவுக்கு சம்பந்தப்பட்ட காணியை விற்பனை செய்வதற்கான உறுதிப்பத்திரம் ராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் கையெழுத்திடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தனது வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்ட பின்னரே உறுதிப்பத்திரத்தில் கையெழுத்திட்டதாகவும், அந்த பணத்தை யார் வைப்பிலிட்டார்கள் என்று தனக்குத் தெரியாது என்றும், ஆனால் உறுதிப்பத்திரத்தில் வாங்குபவராக 'டெய்ஸி பொரஸ்ட்' என்ற பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் வெளிப்படுத்தினார். மேலும், இந்த காணியை விற்பனை செய்வதற்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்வதற்காக நடத்தப்பட்ட 'கராஜ் சேல்' (Garage sale) ஒன்றின் போது, யோஷித ராஜபக்ஷ தனது காதலியுடன் அந்த வீட்டிற்கு வந்திருந்ததாகவும் அவர் நினைவுபடுத்தினார்.
சம்பவம் தொடர்பில் மூன்றாவது சாட்சியாளராக ஆஜரான வசந்த குமார ஜயசூரிய தெரிவித்ததாவது, யசாரா அபேநாயக்க தனது உறவு மகள் என்றும், அவரும் யோஷித ராஜபக்ஷவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்ய நிச்சயித்திருந்ததாகவும் கூறினார். லூஷன் ரத்நாயக்கவின் காணியை வாங்குவது தொடர்பில் யோஷித ராஜபக்ஷ தன்னுடன் கலந்துரையாடி, அதை வாங்க விருப்பம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். அதன்படி, ராஜகிரிய ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் உறுதிப்பத்திரம் கையெழுத்திடப்பட்டதாகவும், அந்த நேரத்தில் காணியை வாங்குவதற்குத் தேவையான பணத்தை பைகளில் போட்டுக்கொண்டு பாதுகாப்பு வீரர்கள் போன்ற தோற்றமுடைய ஒரு குழுவினர் கொண்டு வந்ததாகவும் வசந்த குமார ஜயசூரிய நீதிமன்றத்தில் மேலும் சாட்சியமளித்தார்.