கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உட்பட பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள "கஞ்சிபானி இம்ரான்" என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர், சர்வதேச குற்றக் குழுக்களுடன் கைகோர்த்து இலங்கையில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளது. விசாரணை அறிக்கைகளின்படி, அவர் வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் பெரிய அளவிலான போதைப்பொருள் வலையமைப்புகளை தீவிரமாக இயக்கி வருகிறார்.
பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒரு உயர் மட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்ததாவது, இந்த பாதாள உலகத் தலைவர் பாகிஸ்தான், இந்தியா மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகளை மையமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறார். இந்த வெளிநாட்டு பயங்கரவாத வலையமைப்புகளின் ஆதரவு மற்றும் உதவியுடன் இலங்கையில் போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும், தனக்கு எதிரான தரப்பினரை இலக்கு வைத்து உயிர் சேதங்களை ஏற்படுத்தும் கொலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அவர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்த சந்தேகநபரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரால் ஏற்கனவே சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள போதிலும், பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி பாதுகாப்புப் பிரிவுகளைத் தவிர்த்து அவர் தனது குற்றச் செயல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், வெளிநாட்டு பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் உதவியைப் பெற்று, இந்த பாதாள உலகத் தலைவரை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர தேவையான விசேட நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.