
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையின் சாட்சியப் பதிவு கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது, மேற்கு தென் விசேட விசாரணைப் பிரிவின் வழிகாட்டலின் கீழ் சாட்சியமளித்த, 16 வருடங்களுக்கும் மேலாக முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய விசேட பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் (697) பிரசன்ன, உயிரிழந்த அன்று பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி முன்னாள் பொலிஸ்மா அதிபர் தன்னிடம் இருந்து பிஸ்டல் துப்பாக்கியையும் அதற்கான தோட்டாக்களையும் கேட்டு வாங்கி சுட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
திறந்த நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பின்வருமாறு தெரிவித்தார்.
"நான் 16 வருடங்களுக்கும் மேலாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றுகிறேன். இந்த காலகட்டத்தில், ஐயா ஒருபோதும் என்னிடம் எந்த காரணத்திற்காகவும் பிஸ்டலைக் கேட்கவில்லை. அதேபோல், உடற்பயிற்சிக்குச் சென்ற எந்த நாளிலும் தண்ணீர் போத்தல்களை எடுத்துச் செல்லவில்லை. தண்ணீர் போத்தல்களை எடுத்துச் செல்லுமாறு என்னிடம் கூறவும் இல்லை. சம்பவம் நடந்த அன்று, ஐயா உடற்பயிற்சி செய்ய உடற்பயிற்சி உடையில் இருந்தார், ஆனால் அந்த நேரத்தில் காலணிகள் அணிந்திருக்கவில்லை. பொதுவாக, இதற்கு முன் ஐயா உடற்பயிற்சி செய்யத் தயாராகி காலணிகள் அணியாமல் இருந்ததில்லை. ஆனால் இந்த நாளில், உடற்பயிற்சி உடையில் இருந்தபோதிலும் காலணிகள் அணிந்திருக்கவில்லை. அன்று ஐயா என்னிடம், 'பிரசன்னா, உன் பிஸ்டலை என்னிடம் கொடு, பரிசோதித்துப் பார்க்க வேண்டும்' என்று கூறினார். நான் ஐயாவிடம் பிஸ்டலைக் கொடுத்தேன். ஆனால் ஐயாவிடம் தோட்டக்களைக் கொடுக்கவில்லை. அதன் பிறகு ஐயா, 'பரிசோதித்துப் பார்க்க வேண்டும், தோட்டக்களைக் கொடு' என்று கூறினார். ஐயா கேட்டதால், தோட்டாக்கள் கொண்ட மெகசீனையும் ஐயாவிடம் கொடுத்தேன். பிஸ்டலையும் தோட்டாக்கள் கொண்ட மெகசீனையும் என்னிடம் இருந்து வாங்கி கையில் எடுத்த பிறகு, ஐயா என்னிடம், 'பிரசன்னா, உடற்பயிற்சி செய்யச் செல்ல ஒரு தண்ணீர் போத்தல் கொண்டு வா' என்று கூறினார். நான் தண்ணீர் போத்தல் கொண்டு வரச் சென்றேன். நான் சென்றவுடன் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. சென்று பார்த்தபோது, ஐயா அங்கு சுடப்பட்டு விழுந்திருந்தார். வீட்டிலுள்ளவர்களுடன் உடனடியாக ஐயாவை முல்லேரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம், பின்னர் ஐயா இறந்துவிட்டதாகத் தெரியவந்தது."
கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதி தலஹேனையில் உள்ள வீட்டில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125வது பிரிவின் கீழ் மேற்கு தென் விசேட விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக மேற்கு தென் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடுவெல நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
சம்பவம் தொடர்பான சந்தேகத்திற்குரிய பிஸ்டல் துப்பாக்கி, உயிருள்ள தோட்டாக்கள் கொண்ட மெகசீன் மற்றும் வெற்று தோட்டா உறை ஆகியவற்றை அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை கோருமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிழக்கு கொழும்பு முல்லேரியா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி, பிரேதப் பரிசோதனையில் மரணத்திற்கான காரணத்தை இதுவரை அறிவிக்கவில்லை, மேலும் ஒரு திறந்த தீர்ப்பை மட்டுமே வழங்கியுள்ளார். அதன்படி, மரணம் தொடர்பான உறுதியான பிரேதப் பரிசோதனை அறிக்கை எதிர்காலத்தில் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.