முப்படை அதிகாரிகள் 1,000 பேர் சிறைச்சாலை காவலர்களாக

1000-military-personnel-as-prison-guards

தீவின் சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தும் உடனடி நடவடிக்கையாக, அண்மையில் ஓய்வுபெற்ற 1,000 முப்படை அதிகாரிகளை சிறைச்சாலை காவலர்களாக ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, நாடு முழுவதும் உள்ள 32 சிறைச்சாலைகளிலும் சிறப்பு அதிரடிப்படை (STF) பிரிவுகளை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




ஒரு சிறைச்சாலையில் ஏற்படும் வன்முறைச் சம்பவம் மற்ற சிறைச்சாலைகளுக்குப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ், முப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கள் எதிர்வரும் நாட்களில் ஒவ்வொரு சிறைச்சாலையிலும் அமைக்கப்படவுள்ளன. இந்தக் குழுக்கள் தங்களுக்குள் தகவல்களைச் சுறுசுறுப்பாகப் பரிமாறிக்கொண்டு, கடந்த வாரங்களில் நடந்த சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்.

சிறைச்சாலை அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. இந்தக் கலந்துரையாடலில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நீதி அமைச்சர் ஹர்ஷண நானாயக்கார, பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயியகொந்தா, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் அரச புலனாய்வு சேவையின் (SIS) அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




தற்போது நிலவும் சிறைச்சாலை காவலர் பற்றாக்குறை காரணமாக, இராணுவ ஓய்வூதியதாரர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்டவர்கள் குறுகிய பயிற்சி காலத்திற்குப் பின்னர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு நீதி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Post a Comment

Previous Post Next Post