'ஒன்றுபட்டு இணைவோம் - தூய்மையான இலங்கையை உருவாக்குவோம்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, முழுத் தீவையும் உள்ளடக்கும் வகையில் செயல்படுத்தப்படும் "அத்தம" தேசிய தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (8) ஆரம்பமானது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பாரிய குடிமக்கள் நடவடிக்கை, தீவில் உள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டம் Clean Sri Lanka செயலகம், சமூக சக்தி செயலகம் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருபத்தைந்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பல பிரதான மற்றும் பிரதேச மட்டத்திலான தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களின் முழுமையான மேற்பார்வையின் கீழ் சமூக சக்தி குழுக்களின் செயற்திறன் மிக்க பங்களிப்புடன் இவை வழிநடத்தப்படும்.
இலங்கையின் பாரம்பரிய அத்தம அல்லது உழைப்புப் பரிமாற்றக் கருத்தை இளைஞர்கள் மத்தியில் மீண்டும் ஊக்குவிப்பதும், சமூகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கூடுதலாக, நெடுஞ்சாலைகள் மற்றும் சந்தைகள் உட்பட பொது இடங்களை சுத்தமாகப் பேணுவதன் மூலம் ஒரு அழகான சூழலை உருவாக்குவதும், குறைவாகப் பயன்படுத்தப்படும் பொது வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதில் மக்களிடையே நேர்மறையான மனப்பான்மையை உருவாக்குவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.