நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது தரமற்ற அத்தபரிகர மற்றும் பரிகர பொருட்களை விற்பனை செய்த 127 கடைகளை சுற்றிவளைத்து சட்ட நடவடிக்கை எடுக்க நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தொடர்புடைய சட்ட விதிமுறைகள் முறையாக அமுல்படுத்தப்படுகின்றனவா என்பதைப் பரிசோதிப்பதற்கும் இந்த விசேட நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட விசேட திட்டத்தின் கீழ் மட்டும் நாடு முழுவதும் 92 வெற்றிகரமான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள ஆய்வாளர்கள் முடிந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 35 சுற்றிவளைப்புகளையும் சேர்த்து, 2026ஆம் ஆண்டில் பதிவான மொத்த அத்தபரிகர சுற்றிவளைப்புகளின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆய்வுகளின் போது அத்தபரிகரக்குள் பல பாரிய முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இருபக்க சீவரத்திற்கு பதிலாக ஒருபக்க சீவரங்களை சேர்த்தல், அத்தபரிகரத்தின் பகுதிகள் முழுமையடையாமல் இருத்தல், சீலத்திற்குரிய பொருட்களை மாற்றுதல், அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்கள், சாயம் அல்லது பூச்சு உதிர்ந்த பாத்திரங்கள் மற்றும் துருப்பிடித்த சவரக்கத்திகள் அடங்கியிருத்தல் போன்ற விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு சட்டவிரோதமாக விற்பனை செய்யத் தயாராக இருந்த அத்தபரிகர, சீவரங்கள், அண்டனகடா, பந்தபட்டி, பாத்திரங்கள் உள்ளிட்ட 436 பரிகரப் பொருட்களை அதிகார சபை பொறுப்பேற்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வெளிப்புற பொதியைப் பார்த்து மட்டும் இத்தகைய முறைகேடுகளை நுகர்வோரால் எளிதில் அடையாளம் காண முடியாததால், மத சடங்குகளுக்காக அத்தபரிகரத்தை வாங்கும் போது அதில் உள்ள பொருட்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு தலைவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட சட்டங்களை மீறிய வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக உரிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் இத்தகைய சீரற்ற சந்தைப் பரிசோதனைகள் மற்றும் விசேட சுற்றிவளைப்புகள் நாடு முழுவதும் தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதுடன், இத்தகைய முறைகேடுகள் குறித்த தகவல்கள் ஏதேனும் ஒரு நுகர்வோரிடம் இருந்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற குறுகிய அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கலாம்.