சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களை தனது பல்கலைக்கழக நண்பர்களுக்கு விற்ற குற்றத்திற்காக வடமேல் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவருக்கு 410,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான மாணவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, குலியாப்பிட்டிய மாஜிஸ்திரேட் மிஹில் சிரந்தன சதரசிங்க நேற்று இந்த தண்டனையை விதித்தார்.
பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சந்தேகநபரான மாணவருக்கு எதிராக புகையிலை வரி கட்டளைச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். அதன்படி, 254 கிராம் ஹஷீஷ் மற்றும் சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 500 வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்தமை மற்றும் அவற்றை விற்பனை செய்தமை தொடர்பில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த சட்டவிரோத செயல் முதலில் பல்கலைக்கழக விடுதிகளை ஆய்வு செய்த ஒரு மார்ஷலால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் மற்றும் சிகரெட் கையிருப்பை கண்டுபிடித்த பிறகு, அது குறித்து செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் விசாரணைகள் தொடங்கப்பட்டன. குலியாப்பிட்டிய தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் கமல் ரத்நாயக்க மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் ஏகநாயக்க ஆகிய அதிகாரிகளின் தலைமையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவர் நீண்ட காலமாக இந்த கடத்தலை நடத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.