ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர் தொடர்பான வழக்கு நேற்று (19) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கைகள் அடங்கிய பல குறுந்தகடுகள் (CDs) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் டிலித் ஜயவீர, கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார, அசாங்க நவரத்ன மற்றும் மஹிந்த பத்திரண ஆகிய ஆறு நபர்கள் செய்ததாகக் கூறப்படும் அறிக்கைகள் இந்த குறுந்தகடுகளில் (CDs) உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையில், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் அதிகாரிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குறித்த தாக்குதல் தொடர் தொடர்பான விசாரணைகளுக்காக வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை ஆயுதப் படைக்குச் சொந்தமான ஒரு புலனாய்வுத் தகவல் குறிப்புப் புத்தகம் தமது பொறுப்பில் எடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் குறிப்பிட்டது. அந்தக் குறிப்புப் புத்தகத்திற்குப் பொறுப்பாக இருந்த லெப்டினன்ட் கேர்ணலிடம் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து, அந்தப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் ஒரு விரிவான விசாரணை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் அறிவித்துள்ளனர்.