துபாய் இராச்சியத்தில் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவரின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் பரிசோதித்து, அதற்கான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் துபாயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் நேற்று (19) விடயங்களை முன்வைத்ததுடன், தற்போது 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் அவரது கடத்தல் வலையமைப்பு மற்றும் சட்டவிரோத பணச் சம்பாத்தியம் குறித்து விசாரணை செய்வதற்காக நாட்டின் மூன்று பிரதான தொலைபேசி நிறுவனங்களுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
நாராஹேன்பிட்டி பொலிஸ் பிரிவில் சந்தேகநபர் விசாரிக்கப்படுவதாலும், இந்த நீதிமன்றம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துடன் தொடர்புடைய விடயங்களை மட்டுமே கருத்தில் கொள்வதாலும், அடுத்தகட்ட விடயங்களை இலக்கம் 03 நீதவான் முன் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்களைக் கைது செய்து விசாரித்தாலும், அவர்களைச் சமர்ப்பிக்க வேண்டிய சரியான நீதிமன்றம் குறித்து பொலிஸார் அறிந்திருக்காதது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.இந்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், எதிர்க்கட்சியின் இரண்டு சக்திவாய்ந்த அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பெரும் தொகைப் பணம் செலவிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதில் ஒரு அரசியல்வாதிக்கு 50 பேருந்துகளும், மேலும் ஒரு பெரிய பணப் பரிசும் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளதுடன், அவ்வாறு பணம் பெற்ற ஒரு அரசியல்வாதி களுத்துறை பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அரசியல்வாதிகளிடமும் எதிர்காலத்தில் விசாரணை நடத்த மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தனக்குச் சொந்தமான சொத்துக்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய சந்தேகநபர், தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ள ஐந்து முக்கிய ஹோட்டல்கள் தனக்குச் சொந்தமானவை என்று ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த காலத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளான சோல் பீச் (Soul Beach) ஹோட்டலும் இதில் அடங்கும். போதைப்பொருள் வலையமைப்பு மூலம் சம்பாதித்த சட்டவிரோத பணத்தை சட்டபூர்வமாக்கும் நோக்கில் இந்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. கடற்கரை நிலங்களை வைத்திருக்கும் ஏழை மக்களின் பெயர்களிலும் மற்றவர்களின் பெயர்களிலும் இந்த ஹோட்டல்கள் நடத்தப்பட்டுள்ளன. அத்துடன், பொரலஸ்கமுவ, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ரத்மலான மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளில் பல ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டிய இவர், அரசாங்க நிலங்களையும் முறையற்ற முறையில் தனது உடைமையாக்கிக் கொண்டு ஹோட்டல்கள் மற்றும் வீடுகளைக் கட்டியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், கல்கிஸ்ஸ பிரதேசத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அல்டோ தர்மே, படோவிட்ட அசாங்க மற்றும் சான்டோ ஆகிய முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் தனது நெருங்கிய நண்பர்கள் என்றும், அவர்கள் அனைவரும் தனது போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் ஷிரான் பாசிக் மேலும் வெளிப்படுத்தியுள்ளார்.