கணவனின் தகராறு காரணமாக மனைவி மீது ஆசிட் வீச்சு

acid-was-thrown-on-the-wife-for-her-husbands-quarrel

ஹொரணை, அக்கரை 35 பிரதேசத்தில் இடம்பெற்ற அமிலத் தாக்குதலால் பலத்த காயமடைந்த 29 வயது பெண் ஒருவர் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரணை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த அமிலத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த தகராறு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த பெண் அதில் எந்த வகையிலும் தலையிடவில்லை என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




சம்பவத்திற்கு காரணம் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஒருவர் தாக்கப்பட்டமையாகும். பின்னர் தாக்கப்பட்ட நபர், தன்னைத் தாக்கிய நபரின் வீட்டிற்கு அமில போத்தலொன்றையும் எடுத்துச் சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் தாக்கியவர் வீட்டில் இருக்கவில்லை, அதன் காரணமாக சந்தேகநபர் வீட்டில் இருந்த குறித்த நபரின் மனைவி மீது இந்த அமிலத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அமிலத் தாக்குதலை நடத்தியவர் உட்பட மூவர் ஹொரணை தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஹொரணை, அக்கரை 34 பிரதேசத்தைச் சேர்ந்த 30, 28 மற்றும் 27 வயதுடைய மூவர் ஆவர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர், அத்துடன் ஹொரணை தலைமையகப் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post