ஹரக் கடா பாதுகாப்பான வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார்

the-cattle-are-transferred-to-another-safe-prison

குற்றப் புலனாய்வுத் திணைக்களக் காவலில் இருந்து தப்பிச் செல்ல சதி செய்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள, சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற ‘ஹரக் கடா’ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார். இந்த விடயத்தை சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி.

ராகல முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.




இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி இந்திரஜித் குரே, சட்டத்தரணிகளான ஜாலிய சமரசிங்க, உதுல் பிரேமரத்ன மற்றும் ஹரித் ஹெட்டியாராச்சி ஆகியோர் ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்து, தங்கள் கட்சிக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர ஆட்சேபனை தெரிவித்தனர். அந்த ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கை தொடர முடியாது என தீர்ப்பளித்த போதிலும், தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் வழக்கை தொடர எந்தத் தடையும் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய சட்டமா அதிபருக்கு 14 வேலை நாட்கள் கால அவகாசம் உள்ள நிலையில், அந்தக் காலப்பகுதியில் பிரதிவாதிகளின் பிணை விண்ணப்பங்களை பரிசீலிப்பது பொருத்தமற்றது என அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதி, பிரதிவாதிகளின் பிணை விண்ணப்பங்கள் தொடர்பான உத்தரவை ஒத்திவைத்து, வழக்கை மீண்டும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.




மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால், தற்போது தங்கல்ல பழைய சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற ‘ஹரக் கடா’ என்பவரை பாதுகாப்புடன் கூடிய பொருத்தமான வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

2023 செப்டம்பர் 10 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த ஒரு திகதியில் கொழும்பு இரகசியப் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, பாதுகாப்புக்கு நின்ற பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கி காயப்படுத்தி தப்பிச் செல்ல முயற்சித்தமை உட்பட குற்றச்சாட்டுகள் நதுன் சிந்தக உட்பட குழுவினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாக பொலிஸ் கான்ஸ்டபிள் ரவிந்து சந்தீப குணசேகர, தினேஷ் தரங்க, ருவன் சாமர மற்றும் சஞ்சய அபேசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post