கல்கமுவ, கொஹொபன்குலம பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவர் சிறைச்சாலையில் உயிரிழந்ததாக
காவல்துறையினர் அளித்த தகவலின் பின்னர், அவருக்கான இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, சம்பந்தப்பட்ட நபர் உயிருடன் வீடு திரும்பிய செய்தி வெளியாகியுள்ளது.வாரிப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கீர்த்திசேன உயிரிழந்துவிட்டதாக நன்னேரியா காவல்துறையினர் உறவினர்களுக்குத் தெரிவித்திருந்தனர். இந்த திடீர் செய்தியால் மிகுந்த துயரமடைந்த உறவினர்களும் பிரதேசவாசிகளும் ஒன்றிணைந்து இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்ய உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, பிரதேசமெங்கும் இறுதிச் சடங்கு பதாகைகளை காட்சிப்படுத்தி, துக்க வீட்டிற்கான பந்தல்களை அமைத்து, தகனக் கிரியைகளுக்கான அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்த வேளையில், அனைவரையும் திகைக்க வைத்து கீர்த்திசேன திடீரென வீடு திரும்பியுள்ளார். தனக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்கே, இறந்ததாகக் கூறப்பட்டவர் உயிருடன் வந்ததால், கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பும் ஆச்சரியமும் நிறைந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.