'வல்லே சாரங்க' துபாயில் கைது செய்யப்பட்டார்

welle-saranga-arrested-in-dubai

இலங்கை பாதுகாப்புப் படைகளாலும் சர்வதேச பொலிஸாராலும் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த பாரிய போதைப்பொருள் கடத்தல்காரனும், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியுமான அழகோரம் ஜோதி ரூபன் என்ற 'கணேசரூபன்' என்பவரின் முக்கிய சகாவான கமகே சாரங்க பிரதீப் என்ற 'வெல்லே சாரங்க' டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் உள்ள அவரது வீட்டை சுற்றிவளைத்து நடத்தப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகநபருடன் அங்கு தங்கியிருந்த மேலும் எட்டுப் பேர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.




லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' என்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் உட்பட நாட்டின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வழங்கிய முன் தகவல்களின் அடிப்படையில் டுபாய் பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்களிடமிருந்து கொக்கெய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து கொண்டு நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை இயக்கும் நபர்களை ஒடுக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, டுபாயில் மறைந்திருந்து சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வந்த வெல்லே சாரங்க குறித்து டுபாய் பாதுகாப்புப் பிரிவினர் ஏற்கனவே விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த கைது தொடர்பாக டுபாய் அதிகாரிகள் இதுவரை இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post