களனி ஆற்றில் நீர் எடுக்கப்படும் இடத்தில் நிலவிய நீரின் தரத்தில் ஏற்பட்ட அவசரப் பிரச்சினை காரணமாக, இன்று (25) அதிகாலை முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை நடவடிக்கை எடுத்தது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவித்தலின் பேரில் அம்பத்தலை மற்றும் களனி தென்கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. இதனால் பாவனையாளர்கள் தற்காலிக அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
இருப்பினும், முப்படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன் நீரின் தரத்தைப் பாதித்த அந்த அவசர நிலை தற்போது வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் விநியோகிக்கப்படவுள்ள நீர் உரிய தரத்திற்கும் சுகாதார பாதுகாப்பிற்கும் உரியது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், மீண்டும் நீர் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்க சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கையுடன், நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அண்மித்த பிரதான பகுதிகளுக்கு அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அமைப்பின் தூரம் மற்றும் அழுத்த வேறுபாடுகள் காரணமாக பத்தரமுல்லை, கோட்டை, பாமன்கடை மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்படலாம் என நீர் வழங்கல் சபை சுட்டிக்காட்டுகிறது.
பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து மக்கள் காட்டும் புரிதலையும் ஒத்துழைப்பையும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அன்புடன் பாராட்டுகிறது.