‘திட்வா’ சூறாவளியின் தாக்கத்தால் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்காக நிலங்களை ஒதுக்குவதற்கான விசேட பொறிமுறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள், இந்த சூறாவளியினால் வீடுகள் முழுமையாக அழிந்த மற்றும் மண்சரிவு அபாய வலயங்களில் வாழ்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான காணி அளவை அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளிலிருந்து மாத்திரம் வழங்க முடியாத காரணத்தினால், விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அமைச்சரவைக்கு ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட காணித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பல நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, தற்போது அனுமதிப்பத்திர அடிப்படையில் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளுக்காகத் தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட காணியின் அபிவிருத்தி பெறுமதி பிரதேச செயலாளரினூடாக அனுமதிப்பத்திர உரிமையாளருக்கு வழங்கப்படவுள்ளது. அதன் பின்னர், அக்காணியை ஒத்த வருமான மட்டத்தில் உள்ள வேறொரு நபருக்கு முறையாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்படும்.
அத்துடன், மீளக்குடியமர்த்தும் நோக்கத்திற்காக நன்கொடையாளர்களால் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் தனியார் காணிகள், அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய முதலில் 'தானப்பத்திரம்' மூலம் அரசாங்கத்திற்கு மாற்றப்படவுள்ளது. அதன் பின்னர், 1950 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து இழப்பீட்டைத் துறக்கும் ஒரு பிரகடனத்தைப் பெற்று, அரசாங்கத்தின் உரிமையை பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மீளக்குடியமர்வதற்கு பொருத்தமான காணி இல்லாதவர்களுக்கு மேற்கூறிய பொறிமுறைகள் மூலமாகவும் காணிகளை வழங்க முடியாத சந்தர்ப்பங்களில், அரசாங்க காணியிலிருந்தோ அல்லது அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட காணியிலிருந்தோ அதிகபட்சமாக 10 பேர்ச்சஸ் எல்லைக்குட்பட்ட காணிப் பகுதி வழங்கப்படும். அதன் பின்னர், 1947 ஆம் ஆண்டு இலக்கம் 8 இன் அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அக்காணிகளின் உரிமை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாற்றப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.