22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவூட்டுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கு அமைய நடத்தப்படவிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று பாராளுமன்ற வளாகத்திற்கு தமது சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளப் போவதில்லை என சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்களையும் அழைத்து, 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தமது சட்ட மற்றும் அரசியலமைப்பு ரீதியான கருத்துக்களை முன்வைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ஏற்பாடு செய்திருந்தார். இது குறித்து நேற்று எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்திற்கு அறிவித்த போதிலும், அரசாங்கத் தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பையும் உறுதிப்படுத்தக்கூடிய பொருத்தமான சந்தர்ப்பம் வரும் வரை குறித்த தெளிவூட்டல் நிகழ்ச்சியை ஒத்திவைக்குமாறு கோரியுள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட நிலைப்பாட்டைப் பார்க்கும் போது இது தொடர்பில் எந்தவொரு தரப்புக்கும் இடையில் இணக்கப்பாடு இல்லை என்பது தெளிவாகிறது என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை வழங்க அரசாங்கத்திற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதும் அவதானிக்கப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.