
ஊழல் குற்றத்தைச் செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு உரிய அறிவிப்புகள் கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் பங்கேற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு யோஷித ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார்.இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த இந்த முறைப்பாடு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது. அதன்படி, உரிய அறிவிப்புகள் கிடைத்ததும் சந்தேகநபர்களை மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடுமாறு இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியதுடன், முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
2006 செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 2007 ஜூன் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உரிய கல்வித் தகைமைகள் இல்லாத யோஷித ராஜபக்ஷவை கடற்படையில் இணைத்து, பிரித்தானிய அரச கடற்படைப் பயிற்சியை வழங்குவதன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி அவருக்கு அநியாயமான ஆதாயத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டுகிறது. கடந்த 31 ஆம் திகதி இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக எட்டு குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் பிரதிவாதியாக வசந்த குமார ஜயதேவ கரன்னாகொடவும், இரண்டாவது பிரதிவாதியாக யோஷித கனிஷ்க ராஜபக்ஷவும் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கிற்கு சம்பந்தமாக 25 சாட்சிகளின் பெயர்களும் 47 சாட்சி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரான யோஷித ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீன் நுவரபக்ஷ நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரர் வெளிநாட்டு வர்த்தக மாநாட்டில் பங்கேற்கவுள்ளதால், விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கடந்த வாரம் சமர்ப்பித்த விசேட மனு மூலம் கோரியதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், தற்போது மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்த கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரதான நீதவான், சம்பந்தப்பட்ட கோரிக்கையை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சவிந்திர பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று நீதிமன்றத்தில் ஆஜராகியது.