ஈஸ்டர் தாக்குதல் தொடர் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவுத் தலைவர் துவான் சுரேஷ் சலேவை விடுதலை செய்யக் கோரி நடத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது நீதிமன்றச் செயல்முறையை விமர்சித்தமை தொடர்பாக ஒரு குழு அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விடயங்களை அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளவர்கள் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் டிலித் ஜயவீர, ஸ்ரீ லங்கா மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சுகீஷ்வர பண்டார மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பத்திரண ஆகியோரே ஆவர்.
சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க திகதி குறித்திருந்த வேளையில், கோட்டை ரயில் நிலையம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சத்தியாக்கிரகத்தின் போது கருத்துத் தெரிவித்த சம்பந்தப்பட்ட குழுவினர் 2024 ஆம் ஆண்டு இலக்கம் 8 இன் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை மீறியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விரிவான அறிக்கையை சமர்ப்பித்து சுட்டிக்காட்டியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, சுவர்ணவாஹினி, தெரண, சிறச மற்றும் சுயாதீன தொலைக்காட்சி உள்ளிட்ட 10 இலத்திரனியல் ஊடக நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட திருத்தப்படாத காணொளி காட்சிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக முகாமையாளர்களின் வாக்குமூலங்கள் அத்துடன் சத்தியக் கடதாசிகளும் சாட்சிகளாக CIDயினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் சாட்சியங்களை ஆராய்ந்த நீதவான் குறிப்பிட்டதாவது, சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மூலம் நீதிமன்றச் செயல்முறை விமர்சிக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றும், நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கும் சட்டச் செயல்முறைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டமை தொடர்பாக அடுத்த சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக இவ்வாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவிக்க தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.