வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியில் கும்புக்கன பாலத்திற்கு அருகில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐந்து யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கபிலித்த தேவஸ்தானத்தில் நடைபெறும் பூஜை ஒன்றில் கலந்துகொள்வதற்காக பள்வத்த மற்றும் ஹொரபொக்க பிரதேசங்களில் இருந்து மூன்று ட்ராக்டர் வாகனங்களில் பயணித்தவர்களில் ஒரு ட்ராக்டர் வாகனம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அம்பாறை திசையிலிருந்து மணல் ஏற்றி மாத்தறை திசை நோக்கி அதிவேகமாகச் சென்ற டிப்பர் வாகனம், அதற்கு எதிர்த்திசையில் வந்த ட்ராக்டர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ட்ராக்டர் வாகனத்தின் பின் சக்கரத்திற்கு அருகில் இருந்த இரும்புப் பகுதியுடன் டிப்பர் வாகனம் மோதியதும், அது கழன்று சென்று ட்ரெய்லரின் ஓரத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்ததால் இந்த பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஹொரபொக்க, லாவ பள்வத்த, லுபினிய மற்றும் உடஹன பிரதேசங்களைச் சேர்ந்த 21 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை-மகன் இருவர் அடங்குவர். ஏ. எம். நிலகரத்ன பண்டா (55), ஏ. எம். பசிந்து தினேஷ் (21), ஆர். சேஹான் தரங்க (26), இரேஷ் தேவனித் (55) மற்றும் டி. எம். ரொஷான் தாரக்க (31) ஆகியோர் இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மூவர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியும் ட்ராக்டர் வாகனத்தின் சாரதியும் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மொனராகலை தலைமையக பொலிஸ் பரிசோதகரின் அறிவுறுத்தலின் பேரில் போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
