புதிய கண்டி வீதியில் தெல்கொட பிரதேசத்தில் கார் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் ஏழு வயது சிறுமி மற்றும் அவரது தாய் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மீகஹவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்த பிரதேசத்தில் ஆகஸ்ட் 19ஆம் திகதி இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பியகமவிலிருந்து தெல்கொட நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி திடீரென வீதியின் வலதுபுறம் திரும்ப முயன்றபோது, எதிரே வந்த காரில் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்தபோது முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி, இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் பலத்த காயமடைந்து உடனடியாக உடுப்பில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கர வண்டியின் சாரதி, ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளனர். தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரும், சியம்பலாபே பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய தாயும் அவரது 7 வயது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்துக்குள்ளான காரில் பயணித்த மற்றொரு சிறுமியும் காயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.