தெமட்டகொட வேலுவன வித்தியாலயத்திற்கு அருகில், பொலிஸ் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், ஐந்து பேருடன் மூன்று வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியில் இருந்த மேலும் ஒரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொரளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 18ஆம் திகதி கொம்பனித்தெருப் பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், அதே பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டைத் தாக்குவதற்காக இந்த நபர்கள் முச்சக்கர வண்டியில் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கொம்பனித்தெருப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்களைக் கைது செய்யச் சென்றபோது, அவர்கள் பொலிஸாரைத் தவிர்த்துத் தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்றபோது சந்தேகநபர்கள் பொரளைப் பிரதேசத்திற்கு வந்துள்ளனர்.
பொலிஸ் உத்தரவை மீறி வந்த இந்த முச்சக்கர வண்டி குறித்து அறிந்த பொரளைப் பொலிஸ் அதிகாரிகள், அதை நிறுத்துமாறு சைகை செய்த போதிலும், வண்டி நிற்காமல் சென்றதால், பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி வண்டியை நிறுத்தியுள்ளனர். அப்போது முச்சக்கர வண்டியில் இருந்த சந்தேகநபர்கள் மற்றும் அவர்களிடமிருந்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொலன்னாவ, சாலமுல்ல பிரதேசத்தில் உள்ள லக்ஷந்த செவன அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பொரளைப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் மஞ்சுல துஷாரவின் அறிவுறுத்தலின் பேரில், பிரதான பொலிஸ் பரிசோதகர் பி. எச். எஸ். குணரத்ன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.