
மாகசின் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரின் சடலம் புதைக்கப்பட்டிருந்த கல்லறையில் சிலரால் குழி தோண்டப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டேகொட பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். கடந்த இரண்டாம் திகதி மட்டேகொட பொலிஸாரிடம் இந்த முறைப்பாட்டை உயிரிழந்தவரின் உறவினர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இவ்வாறு குழி தோண்டப்பட்ட இடம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றங்கள் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மொஹமட் அஸ்மான் செரஃப்டீன் என்பவரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடமாகும். ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகத்தின் துப்பாக்கிதாரியாகக் கருதப்படும் இவர், கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பிலும் சந்தேகிக்கப்பட்டவர். கடந்த ஆகஸ்ட் 06 ஆம் திகதி இரவு 10.20 மணியளவில் மாகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது இடம்பெற்ற தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டேகொடவில் உள்ள உறவினர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், மட்டேகொட முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், சடலம் வைக்கப்பட்டிருந்த குழியின் கால் பகுதிக்கு அருகில் ஒன்றரை அடி ஆழத்திற்கு யாரோ ஒருவரால் தோண்டப்பட்டிருப்பது அண்மையில் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கோ அல்லது குடும்ப உறவினர்களுக்கோ எந்தவித அறிவித்தலும் இன்றி, பள்ளிவாசல் ஊழியர்கள் குழியை மீண்டும் மூடிவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எந்த சந்தேக நபர்கள் குறித்தும் தகவல் வெளியாகவில்லை. மட்டேகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்திக்க குமாரவின் பணிப்புரையின் பேரில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.