கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் 02 ஆம் திகதி வெளியிடப்பட்டன. இம்முறை வெட்டுப்புள்ளியான 139 ஐ விட அதிகமாகப் பெற்று 56,000 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.
இந்திகா குமாரி லியனகே அம்மையார், சிங்கள மொழி மூலம் அதிகூடிய புள்ளிகளான 193 குருணாகல் மாவட்டத்திலிருந்தும், தமிழ் மொழி மூலம் அதிகூடிய புள்ளிகளான 188 யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்தும் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 289,867 பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். விசேட தேவையுடைய 1,018 பிள்ளைகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். அவர்களில் 18 விண்ணப்பதாரர்கள் பிரெய்ல் ஊடகம் மூலம் பரீட்சைக்குப் பதிலளித்துள்ளனர்.
மாவட்டம், சம்பந்தப்பட்ட ஊடகம் மற்றும் பெறப்பட்ட மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க 20,000 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இந்த புலமைப்பரிசில்களின் எண்ணிக்கையில் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 250 புலமைப்பரிசில்களும் அடங்கும். அந்தப் பிரிவில் தகுதிபெறும் பிள்ளைகளின் பெறுபேற்றுப் பத்திரங்களில் அது தொடர்பான விசேட குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தமது சரியான பரீட்சை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாக பெறுபேறுகளைப் பரிசோதிப்பதற்கும், பெறுபேற்றுப் பதிவுகளைப் பதிவிறக்கம் செய்து அச்சிடுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பாடசாலை அதிபர்கள் onlineexams.gov.lk/eic இணையத்தளம் ஊடாக சம்பந்தப்பட்ட பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி தமது பாடசாலைக்குரிய பெறுபேற்று ஆவணங்களை அச்சிடும் வசதி உள்ளது. பரீட்சையின் மீள் பரிசீலனை மேன்முறையீட்டுச் செயல்முறை நிறைவடைந்த பின்னர், மாணவர்களுக்குரிய தனிப்பட்ட சான்றிதழ்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.