
தெலிஜ்ஜவில, அல்கிரிய பிரதேசத்தில் புதையல் எடுக்கும் நோக்குடன் ஒன்பது வயது சிறுவன் ஒருவனை பலவந்தமாக கடத்திச் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட நால்வரை இந்த மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும், அவரது நண்பர் ஒருவரும், பிட்டபெத்தர, ஹுலந்தாவ வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இரு குடியிருப்பாளர்களும் ஆவர்.
சம்பந்தப்பட்ட சிறுவன் வீட்டில் தனியாக இருந்தபோது, அவனது கண்களையும் வாயையும் துணிப் பட்டிகளால் கட்டி, வீட்டின் அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். அப்போது சிறுவன் எழுப்பிய அலறல் சத்தத்தைக் கேட்ட பிரதேசவாசிகள் சந்தேகநபர்களைப் பின்தொடர்ந்து சென்று பொலிஸ் உதவியுடன் அவர்களைப் பிடித்துள்ளனர். சிறுவனைக் கடத்த சந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளில், புதையல் ஒன்றைப் பெறும் நோக்குடன் இந்தக் கடத்தல் திட்டமிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இதற்கு முன்னரும் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அருகில் வந்து தகவல்களைத் திரட்டியுள்ளதாக ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். சம்பவத்திற்கு முகங்கொடுத்த சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த ஜயமினி குமாரவின் அறிவுறுத்தலின் பேரில், மாலிம்பட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதித குமார, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சார்ஜன்ட் ரணதுங்க (65134), மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான சமன் (40681) மற்றும் ருவன் (87826) ஆகியோர் அடங்கிய குழுவினர் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.