ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக அகல உடல் கொண்ட விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக இன்று காலை 9.00 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு பாராளுமன்ற உறுப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் வேறு ஒரு திகதியை வழங்குமாறு அவரது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், இலஞ்ச ஆணைக்குழு அந்தக் கோரிக்கையை நிராகரித்து, வட்ஸ்அப் செய்தி மூலம் உத்தியோகபூர்வ கடிதத்தை அனுப்பி, குறித்த நேரத்தில் ஆஜராகுமாறு அறிவித்திருந்தது. அதன்படி, தனது கட்சிக்காரர் ஆணைக்குழுவில் ஆஜரானதை சட்டத்தரணி முதித ஆர். லொக்குமுதலிகே உறுதிப்படுத்தினார்.
இந்த விசாரணைக்கு அடிப்படையாக அமைந்தது 2013 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர்பஸ் A350-900 ரக விமானங்களை கொள்வனவு செய்ய மேற்கொண்ட ஒப்பந்தமாகும். இந்த கொடுக்கல்வாங்கலின் போது பிரித்தானிய ஏர்பஸ் நிறுவனம் இலங்கையின் உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு மில்லியன் கணக்கான டொலர்களை இலஞ்சமாக வழங்கியுள்ளதாக பிரித்தானியாவின் பாரிய மோசடி விசாரணை அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.
பின்னர் 2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததுடன், இதன் காரணமாக விமான நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் பில்லியன் கணக்கான ரூபா பாரிய நஷ்டஈடு செலுத்த வேண்டியிருந்தது. இதற்கு முன்னரும் இந்த இலஞ்ச சம்பவம் மற்றும் பணமோசடி தொடர்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.