இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு முன் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (04) காலை வந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகள் விடுத்த அழைப்பின் பேரில் அவர் இவ்வாறு இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வந்துள்ளார்.
கண்டி பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்திற்காக 74 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரைகள் கொள்வனவு செய்யப்பட்டபோது உரிய கொள்வனவு செயல்முறை மீறப்பட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய காலத்தில், அமைச்சு உத்தியோகபூர்வமாக டெண்டர்களை கோரியிருந்தும் அதனை புறக்கணித்து வேறு ஒரு நபர் ஊடாக இந்தக் கதிரைகளைப் பெற்றுக்கொண்டமை குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் அப்போதைய அமைச்சின் செயலாளராக கடமையாற்றியவரிடமிருந்தும் இதற்கு முன்னர் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.