பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபையின் முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, இன்று (01) காலை 09.00 மணிக்கு அந்தப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவுக்கு போதைப்பொருள் கடத்தும் முக்கிய கடத்தல்காரர்கள் ஐவரில் ஒருவராகக் கருதப்படும் ஷிரான் பாசிக், துபாயில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைத்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முன்னாள் மேயர் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCIB) பொறுப்பதிகாரியான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி தெஹிவளை கல்கிஸ்ஸ மேயராகப் பதவி வகித்த தனசிரி அமரதுங்க, 2021ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.