உயர்தர பௌதிகவியல் வினாத்தாளில் 04 கேள்விகளில் உள்ள தவறுகள் குறித்து முறைப்பாடுகள்

complaints-about-errors-in-04-questions-in-a-level-physics-paper

இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பௌதீகவியல் பல்தேர்வு வினாத்தாளில் நான்கு வினாக்கள் பிழையானவை எனக் கூறி, இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் முன்னணிப் பாடசாலையொன்றின் பௌதீகவியல் ஆசிரியரொருவரால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.




குறித்த வினாத்தாளில் 17, 18, 19 மற்றும் 46 ஆம் இலக்க வினாக்களுக்கு சரியான விடையை வழங்க முடியாதவாறு பிழைகள் உள்ளதாக குறித்த ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 46 ஆம் இலக்க வினாவுக்கு மாத்திரம் புள்ளியொன்றை வழங்க திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அவ்வாறு ஒரு வினாவுக்கு மாத்திரம் புள்ளிகளை வழங்க தீர்மானிப்பதன் மூலம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படும் என சுட்டிக்காட்டும் அவர், பிழையான நான்கு வினாக்களுக்கும் 04 புள்ளிகளையும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறார். எனவே, இந்த பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தி, நான்கு வினாக்களுக்கும் புள்ளிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மேலும் கோரிக்கை விடுக்கிறார்.




இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் தரப்பை விசாரிப்பதற்காக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அம்மையாரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்தது.

Post a Comment

Previous Post Next Post