சிறந்த வாழ்க்கையைத் தேடி வெளிநாடு சென்று சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டிருந்த இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை நீக்குவதற்கு சவுதி உச்ச நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பெரிதும் பாராட்டியுள்ளார். இந்தத் தீர்மானம் அனோஜனுக்கும், அவரது குடும்ப உறவினர்களுக்கும், அத்துடன் இந்த விடயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிய அனைத்து இலங்கையர்களுக்கும் பெரும் ஆறுதலையும் நிம்மதியையும் அளிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த நல்ல விளைவை அடைவதற்கு, நட்பு நாடொன்றின் சட்டச் செயல்முறையை மதித்து மேற்கொள்ளப்பட்ட பொறுமையான இராஜதந்திர தலையீடுகளே நேரடிக் காரணம் என்று ஜனாதிபதி தனது 'X' கணக்கில் ஒரு பதிவை இட்டு தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டில் உள்ள ஒரு இலங்கை பிரஜைக்காக தொடர்ச்சியாகப் போராடிய அனைத்து தரப்பினரின் அயராத முயற்சிகளையும் அவர் பாராட்டினார். இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்த சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி விசேட நன்றியைத் தெரிவித்ததுடன், இந்த சட்டச் செயல்முறைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இரு நாடுகளின் இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தின் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
மரண தண்டனை நீக்கப்பட்ட போதிலும், அனோஜனுக்கு எதிரான எஞ்சிய சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தினார். சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடி வெளிநாடு செல்லும் எந்தவொரு இலங்கை பிரஜையும் தாம் தனிமையாக இருப்பதாக ஒருபோதும் உணரக்கூடாது என்று கூறி ஜனாதிபதி தனது பதிவை மேலும் அர்த்தப்படுத்தினார்.