10 பேர் பயணித்த முச்சக்கர வண்டி டிப்பருடன் மோதி முன்பள்ளி மாணவி பலி

preschool-girl-dies-after-three-wheeler-carrying-10-people-collides-with-tipper

 எட்டு முன்பள்ளி மாணவர்களையும் ஒரு பெண்ணையும் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியில் பயணித்த நான்கு வயது சிறுமி ஒருத்தி, தனது தலையை எதிர்த்திசையில் வந்த டிப்பர் வண்டியில் மோதியதால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இந்த சோகமான விபத்து மில்லனிய, ரன்மினிக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.



இவ்வாறு உயிரிழந்தவர் பரகஸ்தோட்ட, மேற்கு பரகஸ்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த அமாயா திவ்யாஞ்சலி என்ற சிறுமி ஆவார். லபுகம பிரதேசத்தில் அமைந்துள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்று வந்த அவர், பாடசாலை முடிந்ததும் வழக்கம் போல் மேலும் ஏழு நண்பர்களுடன் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த துயரச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.




விபத்து நடந்த நேரத்தில், முச்சக்கர வண்டி மில்லனிய ரன்மினிக்க பிரதேசத்தைக் கடந்து சென்று கொண்டிருந்ததுடன், அதற்கு எதிர்த்திசையில் ஒரு டிப்பர் வண்டி வந்துள்ளது. அப்போது, முச்சக்கர வண்டியின் வலது பக்க இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி, தனது தலையை வண்டிக்கு வெளியே நீட்டியிருந்த நிலையில், எதிரே வந்த டிப்பர் வண்டியில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக சிறுமி உடனடியாக ஹல்தோட்ட மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்குள்ள வைத்தியர்களால் முதலுதவி அளிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த இந்த சிறுமி குடும்பத்தின் ஒரே குழந்தை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக செயற்பட்ட பொலிஸார், விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டியின் சாரதியையும், 10 பேருடன் சிறுவர்களை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதியையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். மில்லனிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் மகேக சில்வா அவர்களின் பணிப்புரையின் பேரில், போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அல்விஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post