தற்போது நிலவும் கடும் மழை காரணமாக தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், ஸ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற வளாகம் வெள்ளத்தில் மூழ்கும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. பாராளுமன்ற உள்வட்டாரத் தகவல்களின்படி, சபை கட்டிட வளாகத்திற்குள் நீர் புகுவதற்கு இன்னும் ஒரு அல்லது இரண்டு அடி தூரமே உள்ளது.
இந்த அவசர அனர்த்த நிலைமைக்கு விசேட கவனம் செலுத்தி, பாராளுமன்றத்தின் கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் தளபாடங்களை பாதுகாப்பாக மேல் தளத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறிப்பாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், வளாகத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள குழு அறைகள் முதலில் மூழ்கும் அதிக வாய்ப்பு உள்ளதால், அந்த அறைகளில் இருந்த புத்தகங்கள் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.
கட்டிட வளாகத்திற்குள் நீர் கசிவதைத் தடுப்பதற்காக பாதுகாப்பு மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்புகளை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அத்துடன், தியவன்னா ஓயாவின் நீர்மட்ட மாற்றங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காக இலங்கை கடற்படையின் விசேட குழுவொன்றும் தற்போது அந்த வளாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளபடி, மழைக்காலங்களில் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து நீர் கீழ்நோக்கிப் பாய்வதால், தியவன்னா ஓயா மிகக் குறுகிய காலத்தில் நிரம்புவது ஒரு சாதாரண நிலைமையாகும்.
Tags:
News