ஹொரணை ரெமுன குளத்தில் சோகம்: குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

a-fifteen-year-old-boy-drowned-while-bathing-in-the-remuna-lake-in-horana

 ஹொரணை ரெமுன குளத்தில் குளிக்கச் சென்ற பதினைந்து வயது சிறுவன் நீரில் மூழ்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மில்லனிய, மானாணை பிரதேசத்தைச் சேர்ந்த தனுஷ் லக்தினு என்ற பதினைந்து வயது சிறுவன் ஆவார். உயிரிழந்த மாணவன் தனது பதினாறு வயது நண்பனுடன் கடந்த 26ஆம் திகதி இரவு குறித்த குளத்தில் குளிக்கச் சென்றபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.



நீரில் மூழ்கிய சிறுவனை அவனது நண்பன் கரைக்குக் கொண்டு வந்து பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து, உடனடியாக செயற்பட்ட அங்குருவாதொட்ட பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


இந்த அனர்த்தம் இடம்பெற்ற இடம் ஹொரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டது என்பதால், மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த மாணவனும் அவனது நண்பனும் நீண்டகாலமாக நெருங்கிய நண்பர்கள் என்பதும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட நோய்க்கான மருத்துவ சிகிச்சையைப் பெற்று வந்தனர் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஹொரணை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரங்க பெரேரா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், குணரத்ன அவர்களின் வழிகாட்டலில் பொலிஸ் சார்ஜன்ட் ரஞ்சித் (43055) உட்பட அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post