இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் (Miss Universe) அமைப்பு பல்வேறு நெருக்கடிகளையும் சர்ச்சைக்குரிய சம்பவங்களையும் எதிர்கொண்டு வரும் நிலையில், மற்றொரு வெற்றியாளர் தனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். கடந்த நவம்பர் 21 ஆம் தேதி பாங்காக் நகரில் நடைபெற்ற 2025 மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ஐவரி கோஸ்ட் (Ivory Coast) நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான்காவது இடத்தைப் பெற்று 'மிஸ் யுனிவர்ஸ் ஆப்பிரிக்கா மற்றும் ஓசியானியா' (Miss Universe Africa and Oceania) பட்டத்தை வென்ற ஒலிவியா யாசே (Olivia Yacé) இவ்வாறு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த போட்டியின் மூலம் தனக்கு பெரிய வெற்றிகளைப் பெறும் திறன் உள்ளது என்பதை உணர்ந்தாலும், தனது எதிர்காலப் பயணம் மரியாதை, பெருமை, சிறப்பு மற்றும் சம வாய்ப்புகள் போன்ற தான் மதிக்கும் கொள்கைகளுக்கு மதிப்பளித்து அமைய வேண்டும் என்று ஒலிவியா குறிப்பிடுகிறார். சமூக ஊடகங்கள் வழியாக ஒரு அறிக்கையை வெளியிட்டு, மிஸ் யுனிவர்ஸ் குழுவுடனான தனது எதிர்கால உறவுகள் அனைத்தையும் நிறுத்திவைக்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார். இளம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க தான் விரும்புவதாகவும், தற்போது தனக்குள்ள வரையறுக்கப்பட்ட பங்கிலிருந்து விலகுவதன் மூலம் தான் மதிக்கும் விழுமியங்களுக்காக முழுமையாக அர்ப்பணிக்க முடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கறுப்பின, ஆப்பிரிக்க மற்றும் கரீபியன் சமூகத்தினரை நோக்கி அவர் வேண்டுகோள் விடுத்தார்: தங்களை யாரும் கீழே தள்ளவோ அல்லது கட்டுப்படுத்தவோ அனுமதிக்காமல், தங்களுக்குப் பொருத்தமற்றது என்று கருதும் இடங்களுக்குக்கூட தைரியமாக நுழையுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த அனுபவங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டே, "ஆப்பிரிக்காவிற்கு நேரம் வந்துவிட்டது" (IT'S TIME FOR AFRICA) என்று குறிப்பிட்டு, தனது பயணத்தை வேறு வழியில் தொடர்வதாக அவர் அறிவித்தார்.
ஒலிவியாவின் இந்த ராஜினாமாவுக்கு சில நாட்களுக்கு முன்பு, எஸ்டோனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரிஜிதா ஷாபாக் (Brigitta Schaback) தனது பதவியை ராஜினாமா செய்தார். எஸ்டோனிய தேசிய இயக்குநரின் தார்மீக விழுமியங்களும் பணி பாணியும் தனக்குப் பொருந்தவில்லை என்று கூறி பிரிஜிதா இந்த முடிவை எடுத்திருந்தார். பெண் அதிகாரமளித்தல் மற்றும் சமத்துவத்திற்காக தான் சுயாதீனமாக செயல்படுவதாக அவர் அப்போது வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு போட்டி ஆரம்பத்திலிருந்தே பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தது. ஒரு போட்டியாளர் மேடையில் இருந்து விழுந்து காயமடைந்தார், மேலும் சில நடுவர்கள் போட்டியில் நிலவும் அநீதியான நடைமுறைகள் காரணமாக ராஜினாமா செய்தனர். மிகவும் சர்ச்சைக்குரிய சம்பவம் என்னவென்றால், போட்டிக்கு முன்னதாக ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத் தலைவர் நவாத் இட்சாரக்ரிசில், மெக்சிகன் போட்டியாளரை (தற்போதைய மிஸ் யுனிவர்ஸ்) பகிரங்கமாக அவமதித்து, அவரை ஒரு நிகழ்விலிருந்து வெளியேற்ற பாதுகாப்புப் படையினரை அழைத்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற போட்டியாளர்கள் வெளியேற முயன்றபோது, அவர்களின் போட்டிப் பதவிகளை ரத்து செய்வதாக அவர் அச்சுறுத்தினார். பின்னர் அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அடுத்தடுத்த புகைப்படங்களில் அவர் புதிய மிஸ் யுனிவர்ஸுடன் காணப்பட்டார்.
Tags:
World News