கொத்மலை ரம்படகம பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருபத்தைந்து பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி இரவு மற்றும் 28ஆம் திகதி அதிகாலை வேளையில் நுவரெலியா மற்றும் பூண்டுலோயா ஆகிய இரு வீதிகளுக்கும் இடையில் அமைந்துள்ள ரம்படகம கிராமத்தின் மத்திய பகுதி இவ்வாறு நிலச்சரிவுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ அல்லது காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கவோ முடியாமல் பிரதேசவாசிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அனர்த்தம் ஏற்பட்ட இடத்திற்குச் செல்லும் வீதிகள் முழுமையாகத் தடைப்பட்டுள்ளதால், அனர்த்த நிவாரணக் குழுக்களால் இதுவரை அந்த இடத்தைச் சென்றடைய முடியவில்லை என்றும் அறியப்படுகிறது.
தற்போது அப்பகுதியில் மின்சாரம் முழுமையாகத் தடைப்பட்டுள்ளதுடன், அனைத்து தொலைபேசி சிக்னல்களும் செயலிழந்துள்ளதால், அப்பகுதியுடன் தொடர்புகொள்வதும் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. நிலச்சரிவு குறித்த தகவல்கள் கிடைத்துள்ள போதிலும், தகவல் தொடர்பு துண்டிப்பு காரணமாக சம்பவம் குறித்த சரியான தகவல்களை உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:
News