பாதாள உலக தலைவன் பழனி ரிமோஷனுடன் பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் சிக்கினார்

sub-inspector-who-worked-with-underworld-leader-palani-remotion-arrested

 இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ள சக்திவாய்ந்த பாதாள உலக கும்பல் தலைவனும், போதைப்பொருள் கடத்தல்காரனுமான பழனி ரிமோஷனுக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்றை உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கியதாகக் கூறப்படும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மோதரை பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டு கொழும்பு வடக்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு (2) உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.




குறித்த கார் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடந்த ஏழாம் திகதி கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக் கொல்வதற்காக துப்பாக்கிதாரிகள் இந்தக் காரிலேயே வந்திருந்தமை தெரியவந்துள்ளது. பாதாள உலக தலைவன் பழனி ரிமோஷனின் நெருங்கிய சகா என கருதப்படும் வத்தளை ஹெந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 'வாலா' என்ற புனைப்பெயரால் அறியப்படும் நபர் ஒருவரே இந்தக் காரைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும், கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி சார்ஜன்ட் அவரிடமிருந்து காரைப் பெற்று உப பொலிஸ் பரிசோதகருக்கு வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை கொலைக்கு இந்தக் கார் பயன்படுத்தப்பட்டதாக தகவல் தெரிந்திருந்தும், சார்ஜன்ட் தனது உயர் அதிகாரிகளுக்கு அது குறித்து அறிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாதாள உலக தலைவனுக்கு சொந்தமான இந்த சந்தேகத்திற்கிடமான காரை தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் தொடர்பிலும் பொலிஸார் தனி விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post