பஸ் பயணிகளுக்கு பணத்தைப் பயன்படுத்தாமல் தங்கள் வங்கி அட்டைகள் மூலம் பயணக் கட்டணத்தைச் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் நேற்று (24) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் மாக்கும்புர பல்துறை போக்குவரத்து மையத்தில் இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசனையுடன் இலங்கையின் போக்குவரத்து சேவையில் வெளிப்படைத்தன்மையையும் தரத்தையும் மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த புதிய முறையைப் பயன்படுத்தும் போது பயணிகளிடமிருந்து எந்தவொரு மேலதிக கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என வலியுறுத்தினார். கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் வங்கிக் கட்டணத்தை பஸ் உரிமையாளர்களே பொறுப்பேற்பதால், பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை மாத்திரம் செலுத்த முடியும். அத்துடன், இதன் மூலம் மீதிப் பணம் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்த்து, சரியான கட்டணத்தை மாத்திரம் செலுத்துவதற்கு பயணிகளுக்கு வசதி கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய டிஜிட்டல் முறை நடைமுறைக்கு வரும்போது எழக்கூடிய நிலைமைகள் குறித்து அடுத்த சில நாட்களில் மிக நெருக்கமாக அவதானிக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
Tags:
News