அவசர அறிவிப்பு: காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வில் மாற்றம் - தேசிய அனர்த்தத்தை எதிர்கொள்ள அரசு தயார்!

update-depression-like-weather-changes-government-prepares-for-national-disaster

 தீவின் தென்கிழக்கே நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது "திட்வா" (Ditwah) சூறாவளியாக வலுப்பெற்று பொத்துவில் கரையோரப் பகுதியில் மையம் கொண்டுள்ளதுடன், அது வடக்கு நோக்கி சாய்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தக் காலநிலை அமைப்பின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகக் கனமழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்கள் உட்பட ஏனைய பகுதிகளிலும் கனமழை மற்றும் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களில் 30 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், 21 பேர் காணாமற்போயுள்ளதாகவும், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.




களனி கங்கையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நோர்வூட், ருவன்வெல்ல, அவிசாவளை, கடுவெல மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. அத்துடன், மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் யட்டினுவர மற்றும் கங்காவட்ட கோரளைப் பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புத்தளம் மாவட்டத்தில் ததுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் சிலாபம் நகரை அண்டிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும், வினாடிக்கு 65,000 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்படுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

கனமழை மற்றும் மண்சரிவுகள் காரணமாக கொழும்பு - நுவரெலியா பிரதான வீதி கீழ் கடுகண்ணாவ பகுதியிலும், ஹேம்மாத்தகம - கம்பளை வீதியும் முழுமையாக தடைப்பட்டுள்ளதால், சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மண்சரிவு மற்றும் மண்மேடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், வீடுகளுக்கு அருகில் அத்தகைய இடங்கள் இருந்தால், குறிப்பாக இரவு நேரங்களில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


சீரற்ற காலநிலை சீரடையும் வரை தெற்கு, மத்திய உட்பட அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பயணிக்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது என வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்த அனர்த்த நிலை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுனியா போன்ற பகுதிகளில் மின் தடைகள் பதிவாகியுள்ளன. சுகாதார நிவாரணங்களை வழங்குவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 077-4506602 என்ற 24 மணி நேர விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவசர அனர்த்த நிலைமைகள் குறித்து 117 அல்லது 077-3957900 என்ற இலக்கங்களுக்கு அழைத்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்குமாறும், சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

கரையோரப் பகுதிகளில் கடல் அலைகள் 3-4 மீட்டர் வரை உயரக்கூடும் என்பதாலும், பலத்த காற்று வீசுவதாலும் மறு அறிவித்தல் வரும் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மீனவ சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த நிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் இராணுவப் பிரிவுகளின் ஒருங்கிணைப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் அவசர மீட்புப் பணிகளுக்காக விமானப்படை ஹெலிகொப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.






Post a Comment

Previous Post Next Post