நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் இன்று (27) இரவு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நாட்டின் பிரதான ஆறுகள் மற்றும் சில ஓடைகளை அண்மித்த பகுதிகளில் மிகக் கடுமையான வெள்ள நிலைமை உருவாகியுள்ளதாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள நீர் அளவீடுகளில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதுடன், இந்த எச்சரிக்கை 2025 நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த திடீர் வெள்ள அபாயம் பிரதானமாக மகாவலி கங்கை, தெதுரு ஓயா, மகா ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆற்றுப் படுகைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளைப் பாதிக்கும். இந்த ஆறுகள் ஏற்கனவே பெருக்கெடுத்து ஓடுவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பெரும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் நீர் மட்டம் மேலும் உயரும் கடுமையான போக்கு காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஆற்றுப் படுகைகளைச் சுற்றியுள்ள மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முடிந்தவரை விரைவாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார அவர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அறிவிப்பு கீழே
