தாய்லாந்தில் இறுதிச் சடங்குகளுக்காக ஒரு கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட பெண் ஒருவர் திடீரென சவப்பெட்டிக்குள் உயிர் பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாங்காக் தலைநகருக்கு அருகிலுள்ள நொந்தபுரி மாகாணத்தில் அமைந்துள்ள வாட் ரத் பிரகோங் என்ற கோயிலில் இந்த புதிய சம்பவம்
பதிவாகியுள்ளதுடன், தகனத்திற்காக கொண்டுவரப்பட்ட சடலம் அசைவதைக் கண்ட கோயில் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.65 வயதான இந்தப் பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்துள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்து சுவாசம் நின்றதாக சந்தேகப்பட்டதை அடுத்து, அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்ப உறவினர்கள் முடிவு செய்தனர். பின்னர், அவரது சகோதரர் பிட்சானுலோக் மாகாணத்திலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரம் பயணித்து, அவரது முன்கூட்டிய விருப்பப்படி உறுப்பு தானம் செய்யும் நோக்குடன் அவரை பாங்காக் நகருக்கு அழைத்து வந்தார்.
இருப்பினும், சட்டப்பூர்வ மரணச் சான்றிதழ் இல்லாததால், மருத்துவமனை அவரது உடலை ஏற்க மறுத்துவிட்டது. பின்னர், அவரது சகோதரர் இந்த கோயில் வழங்கும் இலவச தகன சேவையைப் பெற முயன்றார். கோயில் மேலாளர் மரணச் சான்றிதழைப் பெறுவது குறித்து அவரது சகோதரருக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தபோது, சவப்பெட்டிக்குள் இருந்து தட்டும் சத்தம் கேட்டது.
அப்போது சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அந்தப் பெண் கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டும், கைகால்களை லேசாக அசைத்துக் கொண்டும் இருப்பதைக் காண முடிந்தது. அவர் நீண்ட நேரம் சவப்பெட்டியைத் தட்டிக் கொண்டிருந்திருக்கலாம் என்று கோயில் பொறுப்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். உடனடியாகச் செயல்பட்ட ஊழியர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவரது இரத்த சர்க்கரை அளவு மிகக் கடுமையாகக் குறைந்ததால் (Hypoglycaemia) அவர் மயக்கமடைந்திருந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அவரது சிகிச்சைச் செலவுகளை ஏற்க கோயில் முன்வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான காணொளி இங்கே கிளிக் செய்யவும்
Tags:
Odd

