பதுளை – கொழும்பு பிரதான வீதியில் ஹல்டும்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரேசன் பாலப்பகுதிக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான மழை காரணமாக இன்று (24) மாலை கொழும்பு – பதுளை பிரதான வீதியில், ஹல்டும்முல்ல நகருக்கு அருகிலுள்ள கதிரேசன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாரிய பாறைகளுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் அந்த வீதி முழுமையாக தடைபட்டுள்ளதாக ஹல்டும்முல்ல பிரதேச செயலாளர் கே.ஏ.ஜி. பியங்கிகா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அந்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஹல்டும்முல்ல பிரதேசத்தில் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரிந்து வீழ்ந்தவை மிகவும் செங்குத்தான சரிவுகளைக் கொண்ட உச்சியில் இருந்து உருண்டு வந்த மண்மேடுகளும் கற்களும் என பிரதேச செயலாளர் தெரிவித்தார். வீதியில் விழுந்துள்ள இடிபாடுகளை அகற்றுவது ஆபத்தானதாக இருக்கலாம் என்பதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து வீதியில் விழுந்த கற்களையும் மண்ணையும் அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், இந்த நேரத்தில் அந்தப் பிரதேசத்தில் மழை குறைந்துள்ள போதிலும், எதிர்காலத்தில் மழை பெய்தால் மேலும் மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், கொழும்பு – பதுளை பிரதான வீதிக்கு மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தப்படும் ஹல்டும்முல்ல – சொரகுனே – கிரவனாகம ஊடாக பெரகலைக்குச் செல்லும் வீதியும் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்ததால் முழுமையாக தடைபட்டுள்ளதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Tags:
News