நுගේகொட பிரதேசத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டப் பேரணி மேடையில் பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் கைத்துப்பாக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான உதித் லொக்குபண்டாரவின் கொம்பனித்தெருவில் அமைந்துள்ள வீட்டில் நுගේகொட பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 25ஆம் திகதி கைப்பற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மக்களை உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவருக்கு அருகில் உதித் லொக்குபண்டார பயணப் பைக்குள் கைத்துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருந்த இடத்தில் பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் தனது வசம் இருந்த பதிவு செய்யப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் ரிவால்வரை ஒப்படைத்திருந்த லொக்குபண்டாரவுக்கு, சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு துப்பாக்கி மீண்டும் வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட பின்னர் அதற்கான பதிவு உரிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே அது வழங்கப்பட்டது. ஆனால், நுගේகொட பேரணியில் கலந்துகொண்டபோது அவர் அதற்கான வருடாந்த உரிமத்தைப் பெற்றிருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்கு தென் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகர மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மங்கள தெஹிதெனிய ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் சந்தேகநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:
Trending