VAT செலுத்தாத குற்றத்தை ஒப்புக்கொண்டார் தாம்புக்கல

thambugala-admits-to-not-paying-vat

2019 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான பெறுமதி சேர் வரி (VAT) அறிக்கைகளை முறையாகச் சமர்ப்பிக்கத் தவறிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அவ்ரா லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் விரஞ்சித் தாம்புக்கலவுக்கு 25,000 ரூபா அபராதம் செலுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மஹாராச்சி நேற்று (25) உத்தரவிட்டார். 

நேற்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதி விரஞ்சித் தாம்புக்கல நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.




இதன்போது, பிரதிவாதி தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தாம்புக்கல வெளிநாடுகளில் இருந்து ஈட்டிய சுமார் ஏழு கோடி ரூபாவுக்கான வரிகளை இங்கு செலுத்தியுள்ளதாகவும், அந்தப் பணத்தை பல்வேறு அரசியல்வாதிகள் தவறாகப் பயன்படுத்த முயற்சித்ததாகவும் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சார்பில் சட்டத்தரணி தினேஷ் பெரேரா இந்த வழக்கில் நீதிமன்றத்தில் வாதாடினார். சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட மேலதிக நீதவான், பிரதிவாதி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்தார்.

Post a Comment

Previous Post Next Post